பில்லர் உடைக்கும் பணியால் ஓ.எம்.ஆர்., சாலையில் விரிசல்
துரைப்பாக்கம், சென்னையின் முக்கிய சாலையாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. தென்சென்னை மற்றும் புறநகரில் உள்ள 62 ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஒக்கியம் மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது. இந்த ஒக்கியம்மடு, ஓ.எம்.ஆரை கடந்து செல்கிறது. இதனால், தரைப்பாலம் வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில், மெட்ரோ ரயில் பணிக்காக பழைய சாலையை இடித்து விட்டு, 'பில்லர்' அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, நீர்வழிப்பாதை பக்கவாட்டு 'பில்லரை' உடைக்கும் பணி நடக்கிறது. இதனால், சாலையில் விரிசல் விழுந்து உள்வாங்கி உள்ளது. கனரக வாகனங்கள் சென்றால், பள்ளம் மேலும் உள்வாங்கி போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மாற்று சாலை இல்லாததால், அதற்கு ஏற்ப பணி செய்ய வேண்டியது அவசியம். இதனால், சாலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பணி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.