உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் பரவசம்

சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் பரவசம்

சென்னை, இறைவன் பக்தர்களுக்காக எந்த அளவிற்கு இறங்கி வந்து அருள் செய்யக் கூடியவர் என்பதை உணர்த்தும் விரத நாளாக மார்கழி திருவாதிரை தினம் உள்ளது. மார்கழி மாத பவுர்ணமியன்று திருவாதிரை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுவே 'ஆருத்ரா தரிசனம்' என்றும் அழைக்கப்படுகிறது.இந்த நாளில் விரதம் இருந்து சிவ பெருமானை வழிபட்டால், நமக்கும் அவரது அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருவெம்பாவை வழிபாட்டிற்குரிய 10 நாட்களில் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகிறது.இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நள்ளிரவு 12:00 மணி முதல் உற்சவர் நடராஜ பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 5:00 மணிக்கு தீபாராதனை. 9:00 மணிக்கு நடராஜர் வீதிபுறப்பாடு நடந்தது.மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வர் கோவிலில், நேற்று அதிகாலை, நடராஜருக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், பன்னீர் விபூதி போன்ற பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு, அபிஷேகம் மற்றும் தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாடவீதி வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜரின் அருளை பெற்றனர். அதேபோல, பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர், பொழிச்சலுார் அகத்தீஸ்வரர், வேளச்சேரி தண்டீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர், மண்ணடி மல்லிகேஸ்வரர், ஜமீன் பல்லாவரம் நீலகண்டேஸ்வரர், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும், ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை தரிசித்தனர்.சிவாலயங்களில் மட்டுமல்லாமல், வடபழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 2:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து நடராஜர், பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் நடந்தது. பின், ஊடல் உற்சவம் நடந்தது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.மேலும், மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி