| ADDED : பிப் 12, 2024 02:20 AM
ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், உள்ளகரம் - -புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளை, வேளச்சேரி- - பரங்கிமலை உள்வட்ட சாலை இணைக்கிறது.இரண்டு பகுதிகளிலும் தனியார், அரசு பள்ளிகள் உள்ளதால், தினமும் நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ - மாணவியர், உள்வட்ட சாலையை கடந்து செல்ல வேண்டும்.இதற்கான பிரதான வழித்தடமாக ஆதம்பாக்கம், நேரு தெரு உள்ளது. அத்தெரு சாலையில் இருந்து உள்வட்ட சாலையை 'பீக் ஹவர்'சில் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு, போலீசார் தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:நேரு தெருவில் இருந்து உள்வட்ட சாலையை கடக்கும் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் மடிப்பாக்கம் போலீசார், போக்குவரத்து மாற்றம் செய்தனர்.நேரு தெருவில் இருந்து உள்வட்ட சாலையில் பயணித்து, புழுதிவாக்கம், பாலாஜி நகர் பிரதான சாலை அருகில் 'யு - -டர்ன்' செய்யவும், அதேபோல் உள்ளகரத்தில் இருந்து ஆதம்பாக்கம் செல்வோர் திருமலை நாயக்கர் சாலை அருகே உள்வட்ட சாலையில் 'யு - -டர்ன்' செய்து பயணிக்கும் வகையிலும் வழித்தடம் மாற்றினர்.தவிர, பள்ளி மாணவ - மாணவியரை அழைத்து செல்லும் பெற்றோர் வசதிக்காக, நேரு தெருவில் இருந்து உள்வட்ட சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தினர்.முறையாக சென்ற இத்திட்டம், அடுத்த சில மாதங்களில் கைவிடப்பட்டதால், போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் மீண்டும் சிக்கி தவிக்கின்றனர்.மாணவர்கள் வசதிக்காக, அதே திட்டத்தை கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் அந்த சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.