உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடற்றோர் காப்பகங்களில் பராமரிப்பு குறைபாடு அதிருப்தி! ரூ.3.50 கோடி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

வீடற்றோர் காப்பகங்களில் பராமரிப்பு குறைபாடு அதிருப்தி! ரூ.3.50 கோடி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சென்னையில் உள்ள வீடற்றோர் காப்பகங்களுக்கு ஆண்டுக்கு 3.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டும், அவற்றின் பராமரிப்பு, செயல்பாடு கண்காணிக்கப்படுவதில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சாலையோரம் துாங்குவோர் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.சென்னையில் வீடற்றோருக்கான காப்பகங்கள் இருந்தும், சாலையோரவாசிகள் தொடர்ந்து கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள், மேம்பாலங்களின் கீழே துாங்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இதற்கு, மாநகராட்சி காப்பகங்களின் சுகாதாரம் முறையாக இல்லாதது, போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தாததே என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், அவர்கள் தங்குவதற்கு ஏராளமான லாட்ஜ்கள், ஹோட்டல்கள் உள்ளன. ஆனால், பொருளாதார ரீதியாக பின் தங்கியிருப்போர் துாங்குவதற்காக பெரும்பாலும், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள், மேம்பாலங்கள், சாலை ஓரங்கள், கடற்கரை சாலைகளையே பயன்படுத்தும் நிலை உள்ளது.சில நேரங்களில், இரவில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் துாங்குவோரின் மீது ஏறி, உயிரிழப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.அத்துடன், சாலையோரங்களில் துாங்குவோர், அருகிலேயே சிறுநீர், மலம் கழிப்பது போன்றவற்றால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. அதேபோல், சாலையோரங்களில் குடும்பத்தினருடன் துாங்குவோரின் குழந்தைகளை கடத்தும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இவற்றிற்கெல்லாம் தீர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சி சார்பில், 51 இரவு நேர காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களுக்கான காப்பகம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான காப்பகம், ஆண்களுக்கான காப்பகம், பெண்களுக்கான காப்பகம், மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் என, தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.அதேபோல், முக்கிய அரசு மருத்துவமனை வளாகங்களிலும், இரவு நேர காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு காப்பகங்களிலும், 50 பேர் வரை தங்குவதற்கான வசதி உள்ளிட்டவற்றிக்காக, மாதந்தோறும் மாநகராட்சி 10.25 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டு வருகிறது. ஒவ்வொறு ஆண்டும் இதற்காக 3.52 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.ஆனால், சென்னையில் உள்ள வீடற்றோர் பெரும்பாலும், மாநகராட்சியின் காப்பகங்களை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.அதற்கு, சுகாதாரம் முக்கிய காரணமாக இருப்பவை, அனைத்து காப்பகங்களிலும், கொசு கடி, கழிப்பறை சுகாதாரமின்மை, குடிநீர், உணவில் தரம் உள்ளிட்டவையே. குறிப்பாக, கொசு கடியால் நிம்மதியான துாக்கமில்லை என, குமுறுகின்றனர்.இதனால், காப்பகங்களைவிட சாலையோரங்கள், கடற்கரைகள், மேம்பாலங்கள், பேருந்து நிறுத்தம், நிலையங்களில் நன்றாக உறங்க முடிகிறது என, சாலையோரவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.இதற்கு முன், சென்னை மாநகரில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களை, மாநகராட்சி பணியாளர்கள் சென்று, காவல் துறை உதவியுடன் காப்பகங்களுக்கு அழைத்து வருவர். அந்த பணியையும், மாநகராட்சி தற்போது செய்ய தவறி உள்ளது.இதனால், பொதுமக்கள் குளிர், மழை என எவற்றையும் பொருட்படுத்தாமலும், தங்கள் உயிரை பணயம் வைத்தும் சாலையோரங்களில் துாங்குகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நகரங்களில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு இரவு நேர காப்பகம் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இதற்கான முயற்சியாக, சென்னையில், வீடு இல்லாமல் வீதியில் வசிப்போரை அடையாளம் கண்டு உணவு, இருப்பிடம் வழங்கும் வகையில், 51 இரவு நேர காப்பங்களை, மாநகராட்சி நடத்தி வருகிறது.ஒவ்வொரு காப்பகத்திலும், தங்கும் வசதி கொண்ட படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இவற்றின் பராமரிப்பு, உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக ஆண்டுக்கு 3.50 கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஆனால், இதில் பெரும்பாலான நிதி வீணடிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.வீடற்றோர் காப்பகங்களை பராமரிப்பதிலும், அந்த பணிகளை கண்பாணிப்பதிலும், ஒதுக்கப்படும் தொகை என்ன செய்யப்படுகிறது என்பதையும் மாநகராட்சி கவனத்தில் கொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அவர்கள் மேலும் கூறியதாவது:காப்பகங்கள் துாய்மையுடன் பராமரிக்கப்டுகின்றன, சுகாதாரமாக இருக்கிறதா, போதிய வசதிகள் இருக்கின்றனவா போன்றவற்றை கண்காணிக்க அமைத்த குழு, முறையாக ஆய்வு செய்வதில்லை.தவிர, சாலையோரம் துாங்குவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசு காப்பகங்களில் தங்கவைக்க அழைத்து வருவதில்லை. இதனால், பல காப்பகங்கள் மூடியுள்ளன. இப்பணிகளையும் கொசுக்கடி, கழிப்பறை துாய்மை பணிகளையும் முறையாக மேற்கொண்டால், இரவு காப்பகங்களில், சாலையோரம் வசிப்போர் நிம்மதியாக துாங்குவர்.குறிப்பாக, இரவு நேர காப்பகங்களின் செயல்பாடுகள் குறித்து, ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். இது போன்ற காப்பகங்கள் இருப்பது குறித்து, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, மாநகராட்சி சுகாதார நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது:சென்னையில் வீடற்றோருக்கான காப்பகங்களில், பல்வேறு வகையான மக்கள் தினசரி வந்து தங்கி செல்கின்றனர். அவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் இரவு நேரத்தில் உணவு வழங்கப்படுகிறது.அரசு மருத்துவமனைகளில் செயல்படும் காப்பகங்களில் இரவு உணவாக, அம்மா உணவக சப்பாத்தி வழங்கப்படுகிறது. அத்துடன், சில தன்னார்வ அமைப்புகள், மூன்று வேளை உணவுகள் வழங்கி வருகின்றன. இதனால், பல காப்பகங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது.காப்பகங்களில் குறைகள் குறித்து, பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக தீர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி ஆதரவுடன், இலவசமாக மன வளர்ச்சி குன்றியோருக்கு காப்பகம் நடத்தப்படுகிறது. இங்கு, 16 - 40 வயதுக்குட்பட்ட 48 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, மாநகராட்சி சார்பில், இரவு மட்டும் உணவு வழங்கப்படுகிறது. மற்ற இரண்டு வேளை உணவுக்கு நிதிஉதவி பெற்று, வழங்குகிறோம். சமையல் அறை, கூரைகள் சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.- டாக்டர் நாகவேணி நிறுவனர், ஹோப் அமைப்புஅமைந்தகரை - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை