கிளாம்பாக்கத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் பிற வழித்தட பஸ்கள் குறைப்பால் அதிருப்தி
சென்னை, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில், தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.சென்னையின் எல்லை பகுதி நாளுக்குள் அதிகரித்து வருவதால், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருவள்ளூர் என புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும் போதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. போதிய பஸ்கள் இல்லாதது, கூடுதல் பணிமனைகள் இல்லாதது முக்கிய காரணமாக இருந்து வருகிறது.பிராட்வே, செங்குன்றம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற வழித்தடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பதில்லை என புகார் எழுந்துள்ளன.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:சென்னை புறநகர் பகுதிகளில், குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், பேருந்துகளுக்காக பயணியர் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.குறிப்பாக, இரவு எட்டு மணிக்கு பின், பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மட்டுமே அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பிராட்வே - தி.நகர், வில்லிவாக்கம் - பட்டினம்பாக்கம், அண்ணாசதுக்கம் - கோயம்பேடு, தாம்பரம் - மண்ணிவாக்கம், வண்டலுார், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் வழித்தடங்களில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணியரின் தேவைக்கு ஏற்ப, மாநகர பேருந்துகளை இயக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.