உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழுதான சோபா வினியோகம் ரூ.15,000 இழப்பீடு தர உத்தரவு

பழுதான சோபா வினியோகம் ரூ.15,000 இழப்பீடு தர உத்தரவு

சென்னை:ஆன்லைனில் 'ஆர்டர்' செய்த வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கும்படி, பழுதான சோபா வினியோகம் செய்த 'பெப்பர் பிரை' நிறுவனத்திற்கு, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரியங்கா ஜோஷி, தாக்கல் செய்த மனு:'பெப்பர் பிரை' என்ற ஆன்லைன் நிறுவனத்தில், 2023 ஜன., 2ல், 24,069 ரூபாய் செலுத்தி, சாய்வு சோபா முன்பதிவு செய்தேன். ஜன., 12ல் 'டெலிவரி' செய்தனர்.அதில் கால் வைக்கும் பகுதி உடைந்து இருந்தது. பழுதான சோபா குறித்து, மின்னஞ்சல் வாயிலாக பல முறை புகார் அளித்தும், பொருளை மாற்றித் தரவில்லை. எனவே, பொருளுக்கு செலுத்திய தொகையை திருப்பி வழங்குவதோடு, சேதத்திற்கு 76,000 ரூபாய், மன உளைச்சலுக்கு 1 லட்சம், வழக்கு செலவிற்கு 50,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவக்குமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:டெலிவரி செய்த பொருள் பழுது என தெரிந்தும், பொருளுக்கான தொகையை திருப்பி அளிக்காத நிறுவனத்தின் செயல்பாடு என்பது சேவை குறைபாடு. எனவே, சோபாவுக்கு செலுத்திய தொகை 24,069 ரூபாய், சேவை குறைபாடு, வழக்கு செலவு சேர்த்து 15,000 ரூபாயை, 'பெப்பர் பிரை' நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி