டி.எல்.எப்., வளாகத்தில் சுற்றிய நாய்களை கூண்டோடு கொல்ல முயற்சி
சென்னை, போரூர் -- பூந்தமல்லி சாலையில், 42 ஏக்கர் பரப்பளவில், டி.எல்.எப்., தகவல் தொழில்நுட்ப வளாகம் உள்ளது. அங்கு, 10 மாடிகள் கொண்ட கட்டிடங்கள் உள்ளன. அங்கு. 57 பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இங்கு, 65 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த தொழில்பூங்காவில், தரைதளத்துக்கு கீழே பூமிக்கடியில் மூன்று தளங்களாக வாகனங்கள் நிறுத்துமிடங்கள் உள்ளன. டி.எல்.எப்., வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றி வருகின்றன. அவற்றால் தொல்லை ஏற்படுவதால், பராமரிப்பு நிர்வாகத்தினர் அடிக்கடி மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு புகார் அளிப்பது வழக்கம். இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டல சுகாதரத்துறையினர் அங்கு நாய்களை பிடித்து, குடும்ப கட்டுப்பாடு செய்து விடுவர். இந்நிலையில், நேற்ற டி.எல்.எப்., வளாகத்தில் நடந்த நேர்க்காணலில் பங்கேற்க சென்ற இளைஞர்கள் சிலர், தங்களின் வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய முயன்றபோது, நாய்களின் முனகல் சப்தம் கேட்டது. அருகில் உள்ள புதர் பகுதியில், சில நாய்கள் வாய், கால்கள் கட்டிப்போட்ட நிலையில் காணப்பட்டன. இது குறித்து வேளச்சேரியில் உள்ள புளுகிராஸ் அமைப்பிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.புளுகிராஸ் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, கட்டிபோடப்பட்ட நிலையில் நாய்களை இருசக்கர வாகனத்தில் வைத்து வளாகத்தில் இருந்து வெளியே கொண்டுபோக சிலர் முயன்றனர். அவர்களை தடுத்து, மூன்று நாய்களை மீட்டனர். இரவில் இருந்து அவை கட்டிப்போடப்பட்டதால் சுய நினைவு இழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தன. இதையடுத்து, அவற்றை வேளச்சேரி புளுகிராஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.புளுகிராஸ் அமைப்பின் மேலாளர் வேல்முருகன் கூறியதாவது:டி.எல்.எப்., வளாகத்தில் உணவகங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளன. அவற்றை அங்கிருந்த அகற்ற, வளாக பாதுகாப்பு நிறுவனத்தினர், விலங்குகளை கட்டுப்படுத்தும் தனியார் நிறுவனத்தின் வாயிலாக முயன்றுள்ளனர். அவர்கள் நாய்களை ஈவு, இரக்கமின்றி வாய், கால்களை கட்டி போட்டுள்ளனர். ஆறு மணிநேரத்திற்கு மேல் கட்டிபோட்டதால் நாய்கள் மிகவும் சோர்ந்து, சுய நினைவிழந்துள்ளன. அவற்றுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். இது தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆலந்துார் மண்டல சுகாதாரத்துறை கால்நடை மருத்துவர் அகல்யா கூறியதாவது:டி.எல்.எப்., வளாகத்தில் நாய்கள் தொல்லை தொடர்பாக புகார்கள் அளிப்பர். நாங்கள் அங்குள்ள நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து அங்கேயே விடுவோம். இம்முறை அவற்றை தனியார் வாயிலாக அப்புறப்புடுத்த முயன்றுள்ளனர். இது தவறான செயல். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு கூறினார். -- நமது நிருபர்- -