பெருங்குடியில் நீளும் வடிகால் பணி உட்புற சாலைகளில் 65 சதவீதம் பாக்கி பெருங்குடி மண்டலத்தில் நீளும் வடிகால் பணி சாலைகள் கந்தல் கோலமானதால் அதிருப்தி
பெருங்குடி,பெருங்குடி மண்டலத்தில், மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் முடியாததால் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் உள்ளிட்ட பல வார்டுகளில், சாலைகள் கந்தல் கோலத்தில் உள்ளன. மாநகராட்சி நிர்வாகமும் பொதுமக்கள் புகாரால் திணறி வருகிறது. நீளும் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை, பெருங்குடி மண்டலத்தில், 181 துவங்கி, 191 வரை, 11 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த 2022ல், இரு பகுதியாக மழைநீர் வடிகால் பணிகள் துவங்கின.முதல் பகுதி 108.39 கோடி ரூபாய் செலவில், 26.5 கி.மீ., துாரம், இரண்டாம் பகுதி 301.28 கோடி ரூபாய் செலவில், 79.3 கி.மீ., துாரம் என, மொத்தம் 409.67 கோடி ரூபாய் செலவில் பணிகள் துவக்கப்பட்டன. இதில், 10,573 இடங்களில் மண் வடிகட்டி அமைக்கப்பட வேண்டும்.இந்த பணிகளை 2023ம் ஆண்டிற்குள் நிறைவேற்றி முடிக்க, ஐந்து நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், 50 சதவீதத்திற்கும் குறைவான பணிகளே, கடந்த ஆண்டு முடிக்கப்பட்டன.இதனால், 2023 டிச., 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தில், மழைநீர் வெளியேற வழியின்றி, வெள்ள நீர் தெருக்களைச் சூழ்ந்து, பெரும் பொருளாதார பாதிப்பை தந்தது. வெள்ளத்தில் சிக்கி சிலர் பலியாகினர். 1,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து, மாற்று இடத்திற்கு புலம் பெயர்ந்தனர்.இதையடுத்து, வடிகால் பணிகளை விரைந்து முடிக்க, பல தரப்பிலும் நெருக்கடி அதிகரித்தது. தொடர்ந்து, ஒப்பந்ததாரர்களை அழைத்து, 2024 ஏப்ரலுக்குள் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டது.ஆனால், நடப்பாண்டு ஏப்ரல் முடிந்து டிசம்பர் நெருங்கும் வேளையில்கூட பணிகள் முடியாமல் நீள்வதால், வடிகால் பணிகளுக்காக சிதைக்கப்பட்ட சாலைகளை, முழுமையாக புனரமைக்க முடியவில்லை.மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரத்தின் பல தெருக்களில் சாலைகள் பல்லாங்குழிகளாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.அரசு நிர்வாகத்தின் மீது, பொது மக்கள் தரப்பில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:முதல் பகுதி திட்டத்தில் 100 சதவீத பணிகள் முடிந்து, அங்கெல்லாம் சாலைகள் சீரமைக்கப்பட்டு விட்டன.இரண்டாம் பகுதியில், நவ., 18 வரை, 88 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இன்னும் 13 கிமீ., துாரத்திற்கு, 12 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அனைத்து சாலைகளும் புனரமைக்கப்படும்.இதுவரை, இரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ள 105.7 கி.மீ., துாரத்திற்கான வடிகால் பாதைகள் அனைத்தும், பிரதான தெருக்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. உட்புற தெருக்கள், சாலைகளில் வடிகால் பணிகள் இன்னும் துவங்கவில்லை.இது ஒட்டுமொத்த சென்னை மாநகராட்சிக்கும் பொருந்தும். அந்த வகையில், உட்புற சாலைகள், சிறிய, குறுகிய தெருக்கள் என கணக்கிட்டால், சென்னையின் மொத்த வழித்தடத்தில், 35 சதவீதம் அளவிற்கே இதுவரை வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள 65 சதவீதத்திற்கான உட்புற சாலைகள், குறுகலான தெருக்களில் வடிகால் அமைக்க, தற்போது திட்ட அறிக்கை, வரைபடம், மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.எனவே, அனைத்து தெருக்கள், சாலைகளில் வடிகால் பணிகள் நிறைவடைய இன்னும் சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். அந்தப் பணிகள் முடிவடைய சில ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.