உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரே நாளில் 6 பேரை வெட்டி போதை கும்பல் அட்டூழியம்

ஒரே நாளில் 6 பேரை வெட்டி போதை கும்பல் அட்டூழியம்

கொளத்துார்: கொளத்துார், ராஜமங்கலம், சிவசக்தி நகர் ஒன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரா, 52. இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆகாஷ் என்பவரை தேடி, இரண்டு ஸ்கூட்டரில், ஆறு பேர் கொண்ட கும்பல், நேற்று முன்தினம் வந்துள்ளது. ஆகாஷ், வீட்டில் இல்லாததால், அங்கு நின்றிருந்த சந்திராவை, மது போதை கும்பல் சரமாரியாக வெட்டியது. அதை தடுக்க முயன்ற சந்திராவின் மகன் ராஜேஷ், 36, என்பவரையும், அந்த கும்பல் வீடு புகுந்து வெட்டியுள்ளது. அக்கம் பக்கத்தினர், தாய், மகன் இருவரையும் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சந்திராவின் தலையில் இரண்டு தையலும், ராஜேஷுக்கு, 15க்கும் மேற்பட்ட தையலும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், அதே போதை கும்பல், கொளத்துார், மேட்டு தெருவைச் சேர்ந்த கார்த்திக், 35, மற்றும் அவரது நண்பர்கள், தமிழ்ச்செல்வன், 26, மற்றும் மனோஜ் கிரண், 32, ஆகியோரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. படுகாயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த கும்பல், கோயம்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் வெட்டியுள்ளது. ராஜமங்கலம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர். மதுபோதை கும்பலைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதாகி சிறை சென்றதாக தெரிகிறது. மேலும், கார்த்திக்குடன் இருந்த முன் பகை காரணமாக, இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ