மதுபோதையில் ரவுடிகள் அராஜகம் சாலையில் நின்ற மூவருக்கு வெட்டு
திருவொற்றியூர்: மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள், சாலையில் நின்ற வாலிபரையும், அவரது தாய் மற்றும் தம்பியை வெட்டி சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர், சார்லஸ் நகரில் ரவுடியாக வலம் வருபவர் மணி, 24. இவரது சகோதரிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. திருமணத்தில் பங்கெடுத்த அவரது கூட்டாளிகள், தினேஷ், 28, தினேஷ்குமார், 25, ராஜேஷ், 23, ஆகியோருடன் மணி, மது போதையில், டூ - வீலரில் சார்லஸ் நகரில் பட்டாக்கத்தியுடன், அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், பயந்த அப்பகுதி மக்கள், வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடியுள்ளனர். இதற்கிடையில், டூ - வீலரில் வலம் வந்த நால்வரும், சாலையில் நின்ற தியாகு, 26, என்பவரை இடிப்பது போல் சென்றுள்ளனர். இது குறித்து, தியாகு கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், தியாகுவை கத்தியால் வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்கவே, வெளியே ஓடி வந்து பார்த்த அவரது தம்பி மதன், 22, தாய், ரமணி, 47, ஆகியோரையும், அந்த கும்பல் வெட்டி தப்பியது. மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரித்த சாத்தாங்காடு போலீசார், நேற்று காலை நான்கு பேரையும் கைது செய்தனர். ரவுடிகளின் அராஜகம் அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். தினசரி போலீசார் ரோந்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.