மருத்துவமனையில் ஸ்கூட்டர் திருடிய முதியவர் கைது
திருவொற்றியூ:மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த, ஸ்கூட்டரை திருடிய முதியவரை, போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர், சோமசுந்தரம் நகரைச் சேர்ந்த ஸ்டீபன் சாமுவேல், 58. கடந்த 28ம் தேதி, உடல்நலக்குறைவு காரணமாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தன், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் சென்றார். மருத்துவமனை வளாகத்தின் வெளியே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து, ஸ்டீபன் சாமுவேல், திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். மணலியைச் சேர்ந்த சுதேசன், 59, என்ற முதியவர் ஸ்கூட்டர் திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார், நேற்று காலை கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.