உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3,000 அரிசி மூட்டைக்கிடையே இயங்கும் ஆபீஸ் வரி வசூல் பணி பாதிப்பதாக ஊழியர்கள் புலம்பல்

3,000 அரிசி மூட்டைக்கிடையே இயங்கும் ஆபீஸ் வரி வசூல் பணி பாதிப்பதாக ஊழியர்கள் புலம்பல்

அடையாறு: மாநகராட்சியின் வரி வருவாய் அலுவலகத்தில், 3,000 அரிசி, பருப்பு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதால், அடையாறு மண்டல வரி வருவாய் அலுவலகத்தில், ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடையாறு மண்டல அலுவலகத்தின் தரைத்தளத்தில், 1,000 சதுர அடி பரப்பு கொண்ட வருவாய்த்துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, இரண்டு உதவி மண்டல வருவாய் அதிகாரிகள், 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மாநகராட்சி வரி தொடர்பாக, இந்த அலுவலகத்தை பொதுமக்கள் நாடுகின்றனர். வரி வசூல் மையமும் உள்ளது. இதுபோக, வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் பணியும் இங்கு நடைபெறும். இதனால், இந்த அலுவலகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், இந்த அலுவலகத்தில், 5 கிலோ கொண்ட 2,500 அரிசி மூட்டைகள் மற்றும் 500 பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பல ஊழியர்களின் இருக்கையை அகற்றிவிட்டுத்தான் அந்த மூட்டைகள் அடுக்கப்பட்டன. இதனால், வரி வசூல் உள்ளிட்ட அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், வரி வசூலிக்கும் பணியில், துாய்மை மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், அதிகாரிகளின் ஆலோசனையை கேட்க அலுவலகம் வர முடியவில்லை. மேலும், அரிசி மூட்டையில் இருந்து நெடி பரவுவதால், ஊழியர்கள் பணி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆலோசனை கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும், நெடியால் ஊழியர்களை வெளியில் அழைத்து சென்று பேசுகின்றனர். கணினிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் முக்கிய வரி வருவாய் அலுவலகமாக செயல்படுவதால், அலுவலகம் போதிய இட வசதிகளுடன் இருக்க வேண்டும். இதனால், அரிசி மூட்டைகளை வேறு இடத்தில் மாற்றி அமைத்தால், பணியின் வேகம் அதிகரிக்கும் என, ஊழியர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !