கல்லுாரி மாணவியருக்கு தொழில் முனைவோர் பயிற்சி
அரும்பாக்கம்:அரசின் திட்டங்கள், சுயதொழிலில் மகளிர் பங்கு, தொழில் பயிற்சிகள் உள்ளிட் டவை குறித்து, 500க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டி.ஜி.,வைஷ்ணவா கல்லுாரி மற்றும் மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் இணைந்து, 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்; தொழில் முனைவோரை ஊக்குவித்தல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், அரும்பாக்கத்தில் உள்ள கல்லுாரியில் நேற்று நடந்தது. கருத்தரங்கில், சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வழங்கப்படும் கடன், அரசு திட்டங்களில் தொழில் பயிற்சிகள், செயல்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. 'சோலார் போர்ட்டபிள் லைட் வித் சார்ஜர்' செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தரங்கில் வி.ஐ.டி., கல்லுாரியின் நிறுவனர் விஸ்வநாதன் பேசுகையில், ''மக்கள் தொகையில் பாதி அளவில் உள்ள பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவு தான்; பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, சம உரிமை அளிக்க வேண்டும்,'' என்றார். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜோதிமணி பேசுகையில், ''நாட்டில், பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றால், அவர்களை தொழில் முனைவோராக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் போதே, வாழ்க்கை என்ற கல்வியையும் படிக்க வேண்டும்,'' என்றார். நிகழ்வில், கல்லுாரியின் முதல்வர் சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பல்வேறு மகளிர் கல்லுாரிகளில் இருந்து, 500 மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர்.