ஐ.சி.எப்.குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான காலிமனையில் அத்துமீறி, திறந்தவெளியில் குப்பையைக் கொட்டி எரிப்பதால், ஐ.சி.எப்., முழுதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை உள்ளது. இங்கு ஒருபுறத்தில், வில்லிவாக்கத்தில் இருந்து, ஐ.சி.எப்., மற்றும் அண்ணா நகரை நோக்கிச் செல்லும் பாதையும், மற்றொருபுறத்தில் அண்ணா நகரில் இருந்து வில்லிவாக்கம், பாடியை நோக்கிச் செல்லும் பாதையும் உள்ளன.இதில், பாடியை நோக்கிச் செல்லும் பாதையின் சாலையோரம், ஐ.சி.எப்., மற்றும் ரயில்வேக்கு சொந்தமான இடம் உள்ளது.வில்லிவாக்கத்தில் இருந்து, அண்ணா நகரை நோக்கிச் செல்லும் சாலையோரம், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடம் உள்ளது.இங்கு, வில்லிவாக்கம் முதல் ஐ.சி.எப்., மற்றும் அயனாவரம் வரை உள்ள குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் ராட்சத குழாய் செல்கிறது. காலியாக உள்ள இந்த குடிநீர் வாரிய இடத்தில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, போதிய பராமரிப்பு இல்லாததால், குப்பை கொட்டி எரிப்பது உள்ளிட்ட செயல்களால், சீர்கேடு நிலவுகிறது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நியூ ஆவடி சாலையோரம், அயனாவரம் பகுதியிலுள்ள குடிநீர் வாரிய இடத்தில், போதிய பராமரிப்பு இல்லாததால், வில்லிவாக்கம் முதல் அயனாவரம் வரை, 3 கி.மீ., துாரம் வரை காடு போல் காட்சியளிக்கிறது.குறிப்பாக, தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ள குடிநீர் வாரியத்தின் இடத்தில் அத்துமீறல் நடக்கிறது. அங்கு குப்பை அதிக அளவில் குவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, குப்பையை எரிப்பதால் எழும் புகை காற்றில் கலந்து, அதை சுவாசிப்போர் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த பகுதியைச் சுற்றியுள்ள இடங்களிலும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் இந்த இடத்தில் நடக்கின்றன. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து, குடிநீர் வாரிய இடத்தில் அட்டூழியம் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.