கல்வி நிறுவனங்களை மிரட்டி மேயர் பெயரில் வசூல் வேட்டை?
அம்பத்துார், கல்வி நிறுவனங்களை மிரட்டி, மேயர் பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே, 'குளோபல் டெக்' எனும் பெயரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் ஷேக் முகமது அலி, 40; மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலர். இவரது, அலுவலக எண்ணிற்கு நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட நபர், தன் பெயர் பிரகாஷ் எனவும், சென்னை மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான, ராமசாமி பள்ளியில் கல்வி நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் மேயர் பிரியா பங்கேற்று, அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியருக்கு ரொக்க பரிசு வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நிகழ்ச்சிக்கான செலவு ஒரு லட்சம் ரூபாய் என்பதால், அம்பத்துாரில் உள்ள கல்வி நிறுவனங்கள், 10,000 ரூபாய் வீதம் நிகழ்ச்சி செலவுக்காக கொடுக்க வேண்டும் என, மேயர் பிரியா தரப்பு தெரிவித்ததாக கூறியுள்ளார். ஷேக் முகமது அலி 10,000 ரூபாய் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர், 'பணம் கொடுக்கவில்லை என்றால் உரிமத்தை ரத்து செய்து விடுவேன்' என மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது அலி, 2,000 ரூபாய் தருவதாக கூறியுள்ளார். பின், நேற்று முன்தினம் மாலை, ஷேக் முகமது அலியின் கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்த பாண்டியன் என்பவர், உதவி கமிஷனர் பிரகாஷ் அனுப்பியதாக கூறி, 2,000 ரூபாயை வாங்கி சென்றுள்ளார். பின், நிகழ்ச்சி நடப்பதாக கூறிய அரசு உதவி பெறும் பள்ளியில் ஷேக் முகமது அலி விசாரித்தபோது, அங்கு எவ்வித நிகழ்ச்சியும் நடக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. பின், பணத்தை வாங்கி சென்ற பாண்டியனை தொடர்பு கொண்டபோது, 'பிரகாஷ் சொல்வதை நான் செய்வேன். எனக்கு வேறு ஒன்றும் தெரியாது' எனக் கூறி மழுப்பியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷேக் முகமது அலி, அம்பத்துார் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். இதேபோல மேயர் பிரியா பெயரை பயன்படுத்தி பல பேரிடம், லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.