உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்த சாதகமான சூழல் இல்லை மீனவர்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்த சாதகமான சூழல் இல்லை மீனவர்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்:புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில் கடல் அலை உட்புகுந்து ஆர்ப்பரிப்பதால், படகுகள் நிறுத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை என, மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.சென்னை, காசிமேடில் 1980ம் ஆண்டு 570 படகுகள் நிறுத்தும் வகையில் துறைமுகம் கட்டமைக்கப்பட்டது. இருப்பினும், இடப்பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்தது. தீர்வாக, திருவொற்றியூர் குப்பத்தில் சூரை மீன்பிடித் துறைமுகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணிகள் 2019ல் துவங்கி, 272 கோடி ரூபாய் செலவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த மார்ச் 28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த துறைமுகம், சென்னை மற்றும் காசிமேடு துறைமுகங்களின் வடிவமைப்பில் இருந்து மாறுபாடாக உள்ளது. இரண்டு துறைமுகங்களிலும், தென் கிழக்கு அலை தடுப்பு சுவர், வடக்கு கிழக்கு அலை தடுப்பு சுவரை காட்டிலும், கூடுதல் துாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால், துறைமுக வளாகம் அலையின்றி குளம்போல் காட்சியளிக்கும். புயல், சூறாவளி, கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், துறைமுகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாது.ஆனால், சூரை மீன்பிடித் துறைமுகத்தில், வடகிழக்கு - தென்கிழக்கு அலை தடுப்பு சுவர், மிக அருகருகே சந்திக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், கடலலை நேரடியாக உட்புகுந்து, படகுகள் சேதமடையும் சூழல் உள்ளது என, மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை, கூடுதலாக 330 அடி துாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேம்பாட்டு பணியால்பிரச்னை தவிர்க்கப்படும்

ஐந்தாண்டுகளுக்கு முன் கூட, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வந்தது. இது குறித்து ஆய்வு செய்து, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், தற்போது பாதிப்பு இல்லை.அதேபோல், சூரை மீன்பிடித் துறைமுகமும் மேம்பாட்டு பணிகளால் முழுமை பெறும். ஐ.ஓ.சி.,யால், டீசல் பங்க் அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. தவிர, குளிர்பதன கிடங்கு, ஐஸ் கட்டி தொழிற்சாலையை, தனியாரே அமைத்து பராமரிக்கும்படி, திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில், அந்த பணிகளும் துவங்கும். இந்த துறைமுகத்தில், சிறிய மீன்கள் விற்பனைக்கு வாய்ப்புள்ளது.- மீன்வளத்துறை அதிகாரி

உள்ளூர் மீனவர்கள்வியாபாரிகள் ஏமாற்றம்?

சூரை மீன்பிடித் துறைமுகம், ஏற்றுமதிக்காக மட்டுமே பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது. சிறிய மீன்கள் ஏலம் மற்றும் கடை வியாபாரம் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எனவே, உள்ளூர் மீனவர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. அதிகாரிகள் கவனித்து, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் போல், பெரிய, சிறிய மீன்கள் விற்பனை செய்யும் வகையில், வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். உள்ளூர் மீனவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.- தேசப்பன், 32, மீனவர்,குப்பம், திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை