பூந்தமல்லி, ஜல்லி கொட்டி ஐந்து ஆண்டுகளாகியும், சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டதால், பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் மீது, பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில், சி.ஆர்.எம்., நகர், ராஜாமணி தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.கடந்த 2019 அ.தி.மு.க., ஆட்சியில், இங்கு சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டது. அதன் பின், கடந்த 2023ல் மீண்டும் ஜல்லி கொட்டி, பணிகள் கிடப்பில் போடப்பட்டன.அடிப்படை தேவையான சாலை இவ்வாறு அலங்கோலமாக காட்சி அளிப்பதால், பகுதிவாசிகள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக, ராஜாமணி தெருவில் தனியார் பள்ளி ஒன்று செயல்படும் நிலையில், சைக்கிளில் செல்லும் மாணவர்கள், ஜல்லியால் இடறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.ஜல்லியில் இருந்து வெளியேறும் புழுதி காற்றால், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.இரவு நேரங்களில் வளைவில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், அங்குள்ள திறந்தவெளி வடிகாலில் விழும் அபாயமும் உள்ளது.இது குறித்து பொதுமக்கள், பலமுறை பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.அதிகாரிகள் மெத்தனப் போக்கால் மக்கள் வரிப்பணம் வீணாவதோடு, பொதுமக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே, ஐந்து ஆண்டுகளாக ஜல்லி கொட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, பகுதிவாசி ஒருவர் கூறியதாவது:கொட்டப்பட்ட ஜல்லியால் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்கள் தினமும் அவதிப்படுகின்றனர். இந்த மோசமான சாலையால், வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. துாசியால் தொண்டை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, உடனே சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.