தங்க முலாம் பூசிய நகையை அடகு வைத்து நுாதன மோசடி: நான்கு பேர் கும்பல் கைது
செங்குன்றம், செங்குன்றம் விளாங்காடுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 48; ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு, எண்ணுார் சுனாமி நகரை சேர்ந்த தங்கதுரை,42, என்ற ஆட்டோ டிரைவர் அறிமுகமானார். கஷ்டத்தில் தங்கதுரை பண உதவி செய்ததால், இருவர் இடையே நட்பு பலமானது.இந்நிலையில், 'எனக்கு தெரிந்த வெளியூர் நண்பர்களுக்கு, அவசரமாக பணம் தேவை. வெளியூர் என்பதால், அவர்களின் நகையை இங்கு அடமானம் வைக்க முடியவில்லை. உன் முகவரியில், நகையை அடமானம் வைத்து தர வேண்டும்' என, ராமகிருஷ்ணனிடம், தங்கதுரை கேட்டுள்ளார். தங்கதுரையின் கோரிக்கைக்கு சம்மதித்து, முத்துாட் அடகு கடையில், தன் பெயரில் மூன்று சவரன் நகையை அடமானம் வைத்து, பணம் பெற்று கொடுத்துள்ளார். மீண்டும் சில நாள் கழித்து, 'கோயம்பேடில் காய்கறி லோடு இறக்க வேண்டும். நகையை அடமானம் வைத்து பணம் வாங்கிக் கொடு' என, மீண்டும் தங்கதுரை கேட்டுள்ளார்.கடந்த அக்டோபர் 15ல், தங்கதுரையின் நண்பர்கள் கொடுத்த 29 சவரன் நகைகளை, செங்குன்றத்தில் உள்ள மூன்று வெவ்வேறு அடகு கடைகளில் அடமானம் வைத்து, ஒன்பது லட்சம் ரூபாயை ராமகிருஷ்ணன் வாங்கி கொடுத்துள்ளார். அன்று மாலையே, 'நகையின் தரத்தின்மீது திருப்தியில்லை. பணத்தை கொடுத்து, நகையை பெற்றுச் செல்லுங்கள்' என, செங்குன்றத்தை சேர்ந்த அடமான கடை உரிமையாளர், ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.உடனே, தங்கதுரையை தொடர்பு கொண்ட ராமகிருஷ்ணன், அடகு கடையில் வந்த புகார் குறித்து கூறி, பணத்துடன் வருமாறு கூறியுள்ளார். 'தற்போது ஊருக்கு வந்து விட்டோம். மீண்டும் 18ம் தேதி வருகிறோம். அதுவரை நகையை உரசியோ, சேதாரமோ செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பணம் தர முடியாது' எனக் கூறியுள்ளனர். ஆனால், தங்கதுரையும், அவரது நண்பர்களும் திரும்ப வரவில்லை. அடகுக் கடைகாரர்கள் நெருக்கடி தர, தான் ஏமாற்றப்பட்டதை ராமகிருஷ்ணன் உணர்ந்தார்.தங்கதுரை மற்றும் அவரது நண்பர்களை தேடி, அவர்களின் சொந்த ஊரான கோவை மற்றும் நாகர்கோவில் சென்றார். அங்கும் அவர்கள் இல்லாததால், அங்குள்ள காவல் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரை வாங்க மறுத்த போலீசார், 'சம்பவம் நடந்த ஊரில் புகார் செய்துவிட்டு, எப்.ஐ.ஆர்., வாங்கி வாருங்கள்; நடவடிக்கை எடுக்கிறோம்' எனக்கூறி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, செங்குன்றம் காவல்நிலையத்தில், கடந்த வாரம் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் கோவையில் பதுங்கியிருந்த, தங்கதுரை, அவரது நண்பர்களான தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிதுரை, 27, குமார், 39; கோவை, தெலுங்குபாளையம் ராஜிநகரை சேர்ந்த ஸ்ரீதர், 44 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். நான்கு பேரும் நேற்று முன்தினம் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் மோசடி வெளியாகும்
புகார் அளித்த ஆட்டோ ஓட்டுனர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஏழ்மை ஆட்டோ ஓட்டுனர்களாக பார்த்து, அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து, 20 சதவீதம் தங்கம் கலந்த நகைகளை கொடுத்து அடமானம் வைத்துத் தரச் சொல்லி, லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவிய நண்பனுக்காக, மோசடி பேர்வழி என்று பெயர் வாங்கியதோடு, அவர்களை பிடிக்கப் போய், 85,000 ரூபாயை இழந்துள்ளேன். இவர்கள் என்னிடம் மட்டுமல்ல, ராயபுரம், சைதாப்பேட்டை, எர்ணாவூர் போன்ற பல இடங்களில், இதேபோல் கைவரிசை காட்டியுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால், இன்னும் பல மோசடிகள் வெளியே தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.