மேலும் செய்திகள்
ஒளிரும் வெண்ணெய் உருண்டை பாறை
15-May-2025
சென்னை, துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது அடிக்கப்பட்ட பச்சை நிற லேசர் ஒளியால் பயணியர் பதறினர். அதேபோல, விமானிகளும் தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், 326 பயணியருடன் புறப்பட்டது.சென்னை வந்த விமானம் தரையிறங்குவதற்காக உயரத்தை குறைத்து கொண்டிருந்தது. அப்போது, பரங்கிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து, விமானத்தின் மீது அதிக ஒளியுடன் பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது.ஜன்னல் ஓரத்தில் இருந்த பயணியர், இதை பார்த்து பதறினர். விமானிகளும் நிலை தடுமாறியதாக கூறப்படுகிறது. தாழ்வாக பறந்த விமானம், மீண்டும் உயர பறக்க துவங்கியது. அதேநேரம், சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பி.சி.ஏ.எஸ்., எனும் சிவில் விமான பாதுகாப்பு பணியகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு மத்தியில், விமானம் பத்திரமாக இரவு சென்னையில் தரையிறங்கியது.விமானத்தின் மீது லேசர் ஒளி அடித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதேபோன்று சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என, விமான நிலைய ஆணையம் சார்பில் எச்சரிக்கை அனுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக, சிலரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
★ லேசர் ஒளி கண்ணில்பட்டால் தற்காலிக அல்லது நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம்★ விமானங்களை நோக்கி லேசர் ஒளி அடிப்பது; சட்டவிரோதம் மற்றும் கிரிமினல் குற்றம்★ குற்றவாளிகளுக்கு குறைந்தது ஆறு மாதம் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.★ ஏர்போர்ட் சுற்றியுள்ள விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில், அதிக ஒளியுடன் கூடிய லைட்களை மிளிர செய்யக் கூடாது. இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.★ விமானங்கள் மீது லேசர் ஒளி அடிப்பவர்கள் விபரம் தெரிந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்.
இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:விமானங்கள் மீது லேசர் ஒளி அடிப்பது, பெரும் அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும். விமானியின் காக்பிட் பகுதியில் லேசர் ஒளி தென்பட்டால் விமானங்களை இயக்க சிக்கல் வகுக்கும்.இருப்பினும், ஏர்போர்ட் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. சில சிறுவர்கள் உயர்வான இடங்களுக்கு சென்று விளையாட்டாக இம் மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதன் பாதிப்பு அவர்களுக்கு தெரிவதில்லை. அமைச்சகமும் தொடர்ந்து வழிகாட்டுதல் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
15-May-2025