உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேவையான ஒப்புதல் பெறப்படும் வரை மணலி குப்பை எரியுலை செயல்பட தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தேவையான ஒப்புதல் பெறப்படும் வரை மணலி குப்பை எரியுலை செயல்பட தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, தேவையான ஒப்புதல் பெறப்படும் வரை, மணலி குப்பை எரியுலை மீண்டும் செயல்பட கூடாது என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மணலி சின்னமாத்துாரில், சென்னை மாநகராட்சி சார்பில், மக்கும் தன்மை கொண்ட திடக்கழிவுகளை எரித்து, மின்சாரம் தயாரிக்கும் குப்பை எரியுலை செயல்பட்டு வருகிறது. இதற்கான தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாட்டு அனுமதி முடிந்த பிறகும், கடந்த ஐந்து ஆண்டுகளாக சின்னமாத்துாரில் குப்பை எரியுலை, சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குப்பை எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, துர்நாற்றத்தால் அப்பகுதியில் வசிப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை எரியுலை திட்டங்களை, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: 'மணலி குப்பை எரியுலையின் மறுசீரமைப்பை முடிக்க, கால அவகாசம் தேவை' என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 'தற்போதுள்ள காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை புதுப்பித்து, பொருத்தமான வெப்பம் மற்றும் ஆற்றல் மீட்பு அமைப்பை நிறுவிய பிறகே, எரியுலை மீண்டும் செயல்பட வேண்டும்' என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. செயல்பாட்டு அனுமதியை பெறாமல் குப்பை எரியுலை மீண்டும் செயல்படக் கூடாது. ஒப்பந்ததாரரின் நிர்ணயிக்கப்பட்ட காலம் காலாவதியாகிவிட்டதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தேவையான ஒப்புதல் பெறப்படும் வரை, மணலி குப்பை எரியுலை செயல்படாமல் இருப்பதை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும். இதற்காக தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, செப்டம்பர் 25ல் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ