குண்டாஸ் ரத்து ஞானசேகரன் வழக்கு தள்ளிவைப்பு
சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கின் விசாரணையை, நான்கு வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை நகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, ஞானசேகரனின் தாய் கங்காதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விரிவான வாதங்களுக்காக வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். பாலியல் வன்கொடுமையில், ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, மே 28ல், சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.