புழல், புழல் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணி அளவில், புத்தகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புத்தகரம், தங்கவேல் நகர், பிரதான சாலையில் உள்ள, நாகவல்லி ஏஜன்சிஸ் என்ற கிடங்கின் வாசலில், ஆட்டோ மற்றும் சரக்கு வேனில் இருந்து, பெரிய மூட்டைகளை சிலர் இறக்கினர்.சந்தேகமடைந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, அவர்கள் துணி பண்டல்கள் என்று கூறினர். ஆனாலும், போலீசார், மூட்டைகளை பிரித்து சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்தன. தீவிர விசாரணையில், நாகவல்லி ஏஜன்சிஸ் என்ற பெயரில் உள்ள கிடங்கில், மொத்தமாக இறக்குமதி செய்து பதுக்கி வைத்திருந்த, 1,500 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 30 லட்சம் ரூபாய்.இது தொடர்பாக, கிடங்கின் உரிமையாளர் புத்தகரம் கருக்குவேல், 25, எம்.கே.பி., நகரைச் சேர்ந்த அய்யாதுரை, 45, சின்னத்தம்பி, 30, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த், 36, குன்றத்துாரைச் சேர்ந்த ஜெயசீலன், 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், கஸ்துாரி ஆகியோர், மேற்பார்வையில், கிடங்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.