மெரினா வியாபாரம் ஒழுங்குபடுத்துகிறீர்களா என ஐகோர்ட் கேள்வி மாநகராட்சியிடம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
சென்னை:மெரினா கடற்கரையில், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்த, மாநகராட்சியிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்பது குறித்து தெரியப்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் தேவி. இவர், தனக்கு ஒரு கடை ஒதுக்க கோரியும், அதை மெரினா கடற்கரையில் வேறு இடத்துக்கு மாற்ற கோரியும், ஜூலை 5ல் மாநகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை மனு அளித்தார். இதை பரிசீலிக்க, மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.இளங்குமரன், மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் டி.பி.ஆர்.பிரபு, வனத்துறை செயலர் தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆகியோர் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மெரினா கடற்கரையில், சாலையோர வியாபாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது; தற்போது வரை இது தொடர்பாக என்ன முறை பின்பற்றப்படுகிறது என்பதை, மாநகராட்சி கமிஷனர் விசாரிக்க வேண்டும். மேலும் மெரினாவில் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குப்படுத்த, மாநகராட்சியிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்பது குறித்தும் தெரியப்படுத்த வேண்டும். இந்த நீண்டகாலப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில், பகல் நேரத்தில் மட்டுமல்லாமல், மாலை, அதிகாலை வேளைகளில் சட்டம் - ஒழுங்கை எவ்வாறு காப்பது குறித்தும், மாநகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கில் மாநகர போலீஸ் கமிஷனர், எதிர்மனுதாராக இணைக்கிறோம். அடுத்த விசாரணையின் போது, அரசின் அட்வகேட் ஜெனரல் ஆஜராக கேட்டு கொள்கிறது. விசாரணை, அக்., 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.