அனகாபுத்துாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தானாக முன்வந்தோருக்கு வீடுகள் ஒதுக்கீடு
அனகாபுத்துார் :புறநகரில், மண்ணிவாக்கத்தை அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, பம்மல், அனகாபுத்துார், பொழிச்சலுார், கவுல்பஜார் வழியாக, பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து, ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு, அவற்றை அகற்றி அகலப்படுத்தும் பணி நடந்தது.அனகாபுத்துாரில் டோபிகானா, தாய் மூகாம்பிகை, சாந்தி, காயிதே மில்லத், ஸ்டாலின், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில், ஆற்றை ஆக்கிரமித்து, 700 குடியிருப்பு, கடைகள் கட்டப்பட்டுள்ளது கணக்கிடப்பட்டது. அது தொடர்பாக, பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.கடந்த 2023ல், ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், 20 கடைகள், 90க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.ஆக்கிரமிப்பாளர்களுக்கு, தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்பட்டு, கோடை விடுமுறையில் மீண்டும் அகற்ற திட்டமிடப்பட்டது.அதன்படி, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நேற்று துவங்கியது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க, 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டன.தொடர்ந்து, நீர்வளம், மாநகராட்சி, வருவாய் துறையினர், பொக்லைன் இயந்திரம் வாயிலாக வீடுகளை இடிக்கும் பணியில் இறங்கினர்.முதல் நாளான நேற்று, சாந்தி நகர், தாய் மூகாம்பிகை நகர்களில், வீடு காலி செய்ய தானாக முன்வந்த 15 பேருக்கு, தைலாவரத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.இதற்கிடையில், ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், குடியிருப்புக்கு பதில் ஒரு சென்ட் இடம் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்கு மறுப்பு தெரிவித்த, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், 'அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டே இடிக்கப்படுகின்றன. ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, கூறினார். தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., நகரில், காலி செய்ய தானாக முன் வந்தோருக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்தது.ஆக்கிரமிப்பு அகற்றம், இரண்டாவது நாளாக இன்றும் தொடரும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.