ஐஸ்கிரீம் வியாபாரி தீக்காயத்துடன் மீட்பு
புளியந்தோப்பு,:புளியந்தோப்பு, திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் அல்லா பகஸ், 51; ஐஸ்கிரீம் வியாபாரி. இவர், மது குடித்து விட்டு, அதே பகுதியில் சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு படுத்து உறங்கியுள்ளார்.இந்நிலையில், காலில் திடீரென வலி ஏற்பட்டதால், நேற்று அதிகாலை கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது, அவர் உடுத்தியிருந்த லுங்கி மற்றும் போர்வை தீயில் கருகியதுடன், வலது தொடை பகுதியிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்தது.அங்கிருந்தவர்கள் அல்லா பகஸை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, காலில் 24 சதவீத தீக்காயத்துடன், அல்லா பகஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.தன்னுடன் படுத்திருந்த தாவூத் மற்றும் பாபு ஆகியோர், தனது உடையில் தீ வைத்திருக்கலாம் என, அல்லா பகஸ் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.