கோயம்பேடு சந்தை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு
கோயம்பேடு,:கோயம்பேடு சந்தை பிரதான சாலையில், மீண்டும் முளைத்துள்ள தள்ளுவண்டி கடைகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு மற்றும் நெற்குன்றம் பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக, கோயம்பேடு சந்தை 'ஏ' சாலை உள்ளது. இந்த சாலையில், 10க்கும் குறைவான தள்ளுவண்டி கடைகள் இருந்தநிலையில், ரயில் பெட்டிகள் போல், அடுத்தடுத்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. தவிர, திறந்தவெளி மதுக்கூடமாகவும் மாறியது. சாலையை ஆக்கிரமித்து இந்த கடைகள் அமைத்தது குறித்து நம் நாளிதழில், டிச., மாதம் செய்தி வெளியானது. இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை, அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இந்நிலையில், அதே சாலையின் இன்னொரு பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில், கடைகளுக்கு சாப்பிடவும், பொருட்கள் வாங்கவும் வருவோரால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகளை அகற்றி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.