வடசென்னை குடிநீருடன் குளத்து ஊற்றுநீர் கலப்பு மக்களுக்கு தொற்று பாதிப்பு அபாயம்
சென்னை:சென்னை -- கோல்கட்டா நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலை 11 கி.மீ., பயணித்து மூலக்கடையில் ஜி.என்.டி., சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் இணைகிறது.புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும் குடிநீரை, வியாசர்பாடி நீரேற்று நிலையத்திற்கு எடுத்து செல்வதற்காக, இச்சாலையில் பூமிக்கடியில் ராட்சத குழாய் புதைக்கப்பட்டு உள்ளது. இது, 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இங்கிருந்து வியாசர்பாடி, சர்மாநகர், கொடுங்கையூர், பெரம்பூர், கண்ணதாசன் நகர் உள்ளிட்ட வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.பல ஆண்டுகளாக, இதில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்தாண்டு, கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, மீண்டும் குடிநீர் எடுத்து செல்லும் பணிகள் துவங்கின. பழைய ராட்சத குழாயில் அதிக பிரஷரில் நீர் சென்றதால், பாப்பாரமேடு, வடகரை பள்ளி, வடகரை சந்திப்பு, கிராண்ட்லைன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், புதிதாக அமைக்கப்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை சேதம் அடைந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது சாலையில் ஒட்டுப்போடுவதும், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் சாலை சேதம் அடைவதும் வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில், இரண்டு மாதங்களாக கிராண்ட்லைன் குளத்திற்கு அருகே குடிநீர் குழாயில் தொடர்ந்து நீர் கசிவு அதிகரித்து உள்ளது. குளத்தில் உள்ள நீர் ஊற்றெடுத்து, குடிநீர் செல்லும் குழாயில் கலந்து வருகிறது. மேலும், சாலையில் உள்ள மண் மற்றும் கழிவுகளும், குடிநீரில் கலந்து செல்கிறது. இது வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் வினியோகம் செய்வது தொடர்கிறது.இதனால், காலரா, வயிற்றுபோக்கு, பேதி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து குடிநீர் வெளியேறுவதால், சேதமடைந்த சாலையை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகளின்நடவடிக்கை புரியாத புதிர்
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாதவரம் நெடுஞ்சாலையில், கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பின் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் குடிநீர் வாரிய நடவடிக்கையால் நிலைக்கவில்லை. பல இடங்களில் குடிநீர் வெளியேறி, சாலை சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. விபத்துகளும் அதிகரித்து வருகிறது. நாங்களும் நாள்தோறும் சென்று சாலையில் சில சீரமைப்பு பணிகளை செய்து வருகிறோம். இதுகுறித்து குடிநீர் வாரிய செயற்பொறியாளருக்கு பலமுறை நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ராட்சத குழாயை புதிதாக மாற்றும் பணி, ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. அதுவுரை எதுவும் செய்யமுடியாது; காத்திருங்கள் என்று கூறிவிட்டார். இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பது புரியாத புதிராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.