எம்.எப்.எல்., ரவுண்டானாவில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
மணலி, மணலியில் உள்ள சி.பி.சி.எல்., மற்றும் திருவொற்றியூர் - மணலி விரைவு சாலை, மாதவரம், மீஞ்சூர், மணலிபுதுநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில், எம்.எப்.எல்., சந்திப்பு ரவுண்டானா உள்ளது. இச்சந்திப்பை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. தவிர, மாநகர பேருந்துகளும் இந்த சந்திப்பில் நின்று செல்கின்றன. இங்கு, மின் வாரிய அலுவலகம், குடிநீரேற்று நிலையம், எம்.எப்.எல்., தொழிற்சாலை உட்பட பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலரும், மாநகர பேருந்தை நம்பியே உள்ளனர். இந்நிலையில், எம்.எப்.எல்., ரவுண்டானாவில், நிழற்குடை இல்லாததால், பயணியர் மழை மற்றும் வெயிலில் சிரமப்பட வேண்டியுள்ளது குறித்து, நம் நாளிதழில், அவ்வபோது செய்தி வெளியாகின. அதன் எதிரொலியாக, திருவொற்றியூர் - மணலி விரைவு சாலையில் இருந்து, மணலிக்கு செல்லும் பக்கமும், மணலி, சி.பி.சி.எல்., சந்திப்பில் இருந்து, மாதவரம், மணலிபுதுநகர் போகும் பக்கமும் என, இரு நிழற்குடைகள் அமைக்கப்பட்டு விட்டன. தவிர, மாதவரம், மணலிபுதுநகரில் இருந்து, திருவொற்றியூர் - மணலி விரைவு சாலைக்கு செல்லும் பக்கம், மூன்று சந்திப்புகளும் இணையும் இடத்திலும், நிழற் குடை இல்லை. இதன் காரணமாக, பயணியர் மழை காலத்தில் நனைந்தபடி நிற்க வேண்டியுள்ளது. எனவே, விடுப்பட்ட இரு நிழற்குடைகளையும் அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.**