| ADDED : நவ 19, 2025 04:24 AM
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 44. த.வெ.க.,வில், சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளராக உள்ளார். இவர், தன் ஆதரவாளர்களுக்கு கட்சி பொறுப்பு கேட்டு, சென்னை வடக்கு மாவட்ட த.வெ.க., செயலரான பல்லவி, 35, என்பவரின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாக பல்லவி வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள், பல்லவியின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின், அங்கு வந்த பல்லவியும், கலைச்செல்வியும் ஒருவரையொருவர் மாறி மாறி வசைபாடிக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதாக, இரு தரப்பும் மாறி மாறி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார், இரு தரப்பையும் அழைத்து பேசி, சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். த.வெ.க.,வில் உட்கட்சி பூசலால், இரண்டு பெண் பொறுப்பாளர்கள் மல்லுக்கட்டியது, அப்பகுதி அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.