கொடுங்கையூர்: கொடுங்கையூரில், கார் ஓட்டுநர் மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவியிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; கார் ஓட்டுனர். இவரது மனைவி சரண்யா, 29, இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும், மணிகண்டன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். பின், வீட்டின் ஹாலின் மனைவி, இருபிள்ளைகளும் உறங்கியுள்ளனர். நள்ளிரவு எழுந்து பார்த்த போது, வீட்டின் படுக்கை அறையில் மணிகண்டன் நைலான் கயிற்றால் துா க்கிட்டு கிடந்துள்ளார். வீட்டில் இருந்த சிறிய கத்தியை எடுத்து, கயிற்றை அறுத்த சரண்யா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் மணிகண்டன் இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மணிகண்டன் துாக்கிட்டு இறக்கவில்லை. மாறாக, கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர். விசாரணையில், சரண்யாவிற்கு பக் கத்து வீட்டில் வசிக்கும் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை மணிகண்டன் கண்டித்ததால், அவரை ஆண் நண்பருடன் சேர்ந்து, மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். சரண்யாவை கைது செ ய்து விசாரிக்கின்றனர்.