தமிழக மக்களுக்காக தன் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர். என்றால், அவரது ஆதார சக்தியாகவும், தியாகத்திற்கு இலக்கணமாகவும் வாழ்ந்தவர் ஜானகி. அவரின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.உச்சகட்ட புகழுடன் இருந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்காக, சினிமாவைத் துறந்தவர், ஜானகி. எம்.ஜி.ஆர்., சுடப்பட்ட நேரத்திலும், அமெரிக்காவில் சிகிச்சை எடுத்த நேரத்திலும் தாயாக, தாதியாக கவனித்து, எமனிடமிருந்து உயிரை மீட்ட நவீன சாவித்திரி.1950 களில், அவர் சினிமாவில் சம்பாதித்து வாங்கிய சொத்துதான், தானமாகக் கொடுக்கப்பட்ட இப்போதைய அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம். இப்படி பல தியாகங்கள் செய்தவர் என்பதாலே, எம்.ஜி.ஆரின் திடீர் மரணத்தையொட்டி, அனைவரும் கட்டாயப்படுத்தி ஜானகியை தமிழக முதல்வராக்கினோம். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர், தமிழகத்தின் 11வது முதல்வர், இந்தியாவின் ஐந்தாவது பெண் முதல்வர் என்ற பெருமைகளால், அவர் மகிழ்ச்சி அடையவில்லை.ஏனென்றால், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி உருவானதால், இரட்டை இலை முடக்கப்பட்டு, 1989 சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது.எம்.ஜி.ஆர்., ஆசி பெற்ற இரட்டை இலையை மீட்டெடுத்தால் மட்டுமே, அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்து, ஜானகியுடன் பேச்சு நடத்தினோம். எங்கள் துாய்மையான நோக்கத்தை ஜானகி புரிந்துகொண்டார். அ.தி.மு.க., புத்துயிர் பெறுவதற்காக கட்சி நிதி, அறக்கட்டளை நிதி போன்ற அத்தனை சொத்துக்களையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து, அரசியல் துறவறம் மேற்கொண்டார்.கட்சித்தலைவர் பதவியை கொடுக்க ஜெயலலிதா முன்வந்தபோது, அதை நிராகரித்துவிட்டு 'தலைவர் காலத்தில் தேர்வு செய்து பணியாற்றிய மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகரச் செயலர்கள் பதவி, அடுத்த கட்சித் தேர்தல் வரை நீடிக்க வேண்டும்' என்ற நிபந்தனையை மட்டும் விதித்தார். பிளவுபட்ட அணிகளை இணைத்த ஜானகியின் தியாகத்தினால், மீண்டும் இரட்டை இலை கிடைத்தது. மக்கள் மனதில் கண்ணுக்குத் தெரியாத மின்சாரமாக எம்.ஜி.ஆர்., வாழ்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில், இன்று வரை இரட்டைஇலை வெற்றி பெற்றுத் தருகிறது. இரட்டை இலைக்காக ஜானகி செய்த தியாகம், அ.தி.மு.க., வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அரசியல் வரலாறு. புரட்சித்தலைவருக்காகவும், இயக்கத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜானகியின் தியாகத்தை இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.- சைதை துரைசாமிமுன்னாள் மேயர், சென்னை மாநகராட்சி