உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவுக்கு ஒதுக்கீடு ரூ.2,442 கோடி! நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கவும் அரசு அனுமதி

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவுக்கு ஒதுக்கீடு ரூ.2,442 கோடி! நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கவும் அரசு அனுமதி

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவக்க, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்காக, 2,442 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதியை அடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணியை உடனே துவக்க உள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில், தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், கோயம்பேடு - ஆவடி வரையில், முதலில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. பயணியரின் கோரிக்கை ஏற்று, இந்த திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க, பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கோயம்பேடு - பட்டாபிராம் வெளிவட்டச் சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கடந்த பிப்., 20ல் தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இந்த திட்டத்தை ஆய்வு செய்த தமிழக அரசு, 9,928.33 கோடி ரூபாயில் செயல்படுத்த, மே 2ல் ஒப்புதல் அளித்தது. வழித்தடம் புதிய மெட்ரோ வழித்தடம், 21.76 கி.மீ., கொண்டதாக அமையும். கோயம்பேட்டில் துவங்கி, பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில், ஆவடி வழியாக, பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், வழித்தடம் அமைகிறது. இந்நிலையில், இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை துவங்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், சாலைப் பணிகள், நிலப்பரப்பு ஆய்வுகள், புவி தொழில்நுட்ப ஆய்வு, மரம் வெட்டுதல், மீண்டும் நடுதல் போன்ற பிற குடிமைப் பணிகள் உட்பட, பல்வேறு பணிகளுக்கு, 2,442 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பணி துவக்கம் இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக் கூறியதாவது: கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, ஏற்கனவே தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் ஒப்புதல் பெற, மாநில அரசு வாயிலாக அனுப்பி உள்ளோம். இந்த திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துவது மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள, 2,442 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. நிலம் அடையாளம் கண்டு கையகப்படுத்துவது, பைப் லைன், மின் இணைப்பு உள்ளிட்ட இதர பணிகள் மாற்றம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடனே, மெட்ரோ திட்டப்பணிகளை துவங்க உள்ளோம். சென்னையில் நடக்கும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை படிப்படியாக முடித்து, பயன்பாட்டிற்கு வரும்போது, பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 19 இடங்களில் ரயில் நிலையங்கள் கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடத்தில், கோயம்பேடு, பாடிபுதுநகர், பார்க் ரோடு, கோல்டன் பிளாட் ஜங்சன், வாவின் முதல் பிரதான சாலை, அம்பத்துார் எஸ்டேட், அம்பத்துார் டெலி எக்சேன்ஜ், டன்லப், அம்பத்துார். அம்பத்துார் ஓ.டி., - ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரயில் நிலையம், கஸ்துாரிபா நகர், இந்து கல்லுாரி, பட்டாபிராம், வெளிவட்ட சாலை ஆகிய, 19 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி