உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தமிழைப் போல் சமஸ்கிருதமும் இனிமையான மொழி - -வைகைச்செல்வன் மலைப்பாக உள்ளது

தமிழைப் போல் சமஸ்கிருதமும் இனிமையான மொழி - -வைகைச்செல்வன் மலைப்பாக உள்ளது

சென்னை,சென்னை, நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியின் ஏழாம் நாள் மாலை நிகழ்வில், 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' எனும் தலைப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்,''தமிழைப் போன்று சமஸ்கிருதமும் இனிமையான மொழி தான்,'' என்றார்.அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது:எழுத்திற்கும் பேச்சிற்கும் வித்தியாசம் உள்ளது. எழுத்து என்பது நிலையானது. பேச்சு என்பது மாறுபடும் தன்மை கொண்டது. அந்தந்த ஊருக்கேற்ப பேச்சு வழக்கு மாறும். ஒருவரின் பேச்சை வைத்து, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என அறியலாம். ஆனால், எழுத்தை வைத்து அவ்வாறு கணிக்க முடியாது. எழுத்திற்கு இலக்கணம் தேவை. பேச்சுக்கு அது தேவையில்லை.உலகின் மூத்த மொழியான தமிழ் தன்னேரில்லாதது. கதிரவன் தோன்றிய போதே தோன்றியது. தமிழின் முதல் இலக்கண நுாலாகவும், இலக்கிய நுாலாகவும் உள்ள தொல்காப்பியத்தில், அறிவின் நிலை பற்றி, 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே விளக்கப்பட்டுள்ளது.உலகின் தொன்மையான மொழிகளாக தமிழ், சமஸ்கிருதம், பாலி, லத்தின், பாரசீகம், கிரேக்கம், ஹூப்ரு ஆகியவை கண்டறியப்பட்டு உள்ளன. இதில் தமிழ், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளும் இந்தியாவில் தோன்றியவை. ஆறு தொன்மை மொழிகளில் நான்கு வழக்கொழிந்து விட்டன. தமிழ் மற்றும் சீன மொழி மட்டுமே இன்றளவும் எழுத்திலும், பேச்சிலும் வாழ்ந்து வருகின்றன.தமிழைப் போன்றே சமஸ்கிருதமும் மிக இனிமையான மொழி. அந்த மொழியை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகள் இப்போது நடக்கின்றன.எதைப் படித்தால் வேலை கிடைக்கும் என ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், வாழ்க்கையைப் படிக்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும்.இலக்கியங்கள் வாழ கற்றுத் தருவதோடு அன்பையும் விதைக்கின்றன. எல்லா தமிழ் இலக்கியங்களும் வாழக் கற்றுக் கொடுக்கின்றன.திராவிட மொழிகளாக முதலில் 24 மொழிகளும், பின்னர் 4 மொழிகளுமாக மொத்தம் 28 மொழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், தமிழ் மொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் வித்தாக உள்ளது. தாயும், தந்தையுமாக உள்ளது. தமிழில் இருந்தே ஏனைய திராவிட மொழிகள் உருவாகின.ஒன்றைப் படிக்கும்போது தான் மனதில் இன்னொன்று தோன்றும். எனவே, வாசிப்பை எந்த அளவுக்கு நேசிக்கிறோமோ, அந்த அளவுக்கு அது நம்மை வளர்க்கும். நம் சிந்தனையைத் துாண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை