சென்னை : 'குமரிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு, படிப்படியாக வலுவடைந்து, சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராமேஸ்வரத்தில், 6; மண்டபம், 5; தங்கச்சிமடம், 4; வாலிநோக்கம் பகுதியில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cknt8q75&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் - இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இன்று வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பின், இந்த நிகழ்வு, சென்னை மற்றும் வட மாவட்டங்கள், புதுச்சேரி நோக்கி நகரக்கூடும். மலாக்கா ஜலசந்தி அருகில், அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் இரவு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. நேற்று காலை, 5:30 மணி அளவில், இது 'சென்யார்' புயலாக வலுவடைந்தது. அதன் பின் புயல், மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, இந்தோனேஷியா கரையை கடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் பலத்த தரைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலுார், அரியலுார் மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில், நாளை மறுநாள் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில், நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள தால், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்துார், வேலுார், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.