சொகுசு காரில் ஆண் சடலம் வளசரவாக்கத்தில் சலசலப்பு
வளசரவாக்கம், வளசரவாக்கம், ராஜகோபாலன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பி.எம்.டபிள்யூ., காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக, வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் காரின் பின் சீட்டில் அழுகிய நிலையில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை மீட்டு, கே.கே., நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், அதே பகுதியில் உள்ள மஞ்சுநாதன், வசந்த் ஆகியோருக்கு கார் மெக்கானிக் கடை உள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த கிேஷார் குமார், 30, என்பவர், தன் பி.எம்.டபிள்யூ., காரை பழுது பார்க்க, ஒரு மாதத்திற்கு முன் விட்டு சென்றுள்ளார்.அந்த கார், ராஜகோபாலன் தெருவில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை மஞ்சுநாதன் கார் கதவை திறந்து பார்த்தபோது, சடலம் இருந்தது தெரியவந்தது. காரின் சென்சார் பழுதானதால், அதன் கதவுகள் திறந்திருந்ததாக கூறப்படுகிறது.இறந்த நபர் யார்; மது போதையில் காரில் படுத்திருக்கும் போது உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு காருக்குள் மர்ம நபர்கள் வீசி சென்றனரா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.