ஸ்கேன் மிஷின் வாங்கி விற்றால் லாபம் தருவதாக ஏமாற்றியவர் கைது
சேத்துப்பட்டு:பழைய 'ஸ்கேன்' இயந்திரத்தை வாங்கி விற்கும் தொழிலில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக கூறி, 15 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர். சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தினகரன், 40. இவரது நண்பரான ராஜா, கடந்த மார்ச்சில் ஸ்டாலின் மற்றும் ஏகன் ஆகியோரை, தினகரனுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் இருவரும், குறைந்த விலைக்கு பழைய ஸ்கேன் இயந்திரம் வாங்கி, புதுப்பித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும். 15 லட்சம் ரூபாயில் ஒரு இயந்திரம் இருப்பதாகவும், அவற்றை புதுப்பித்து, 30 லட்சம் ரூபாய்க்கு விற்று லாபத்தை பிரித்து கொள்ளலாம் எனவும், தினகரனிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய தினகரன், 15 லட்சம் ரூபாயை அவர்களிடம் முதலீடு செய்துள்ளார். பணம் பெற்று ஒரு மாதமாகியும் பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக, மூவர் மீதும் சேத்துப்பட்டு போலீசில், தினகரன் புகார் அளித்தார். விசாரணையில், அவர்கள் பண மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, கொளத்துார், பூம்புகார் நகரை சேர்ந்த ஏகன், 39, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.