மினி பஸ் வாங்கி தருவதாக ரூ.18.60 லட்சம் ஏமாற்றியவர் கைது
ஆவடி, பட்டாபிராம், கோபாலபுரம் கிழக்கு ஆறாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அபிஷேக், 20; கார் வாட்டர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு, கார்கள் 'வாட்டர் வாஷ்' செய்ய அடிக்கடி வந்து செல்லும், வெங்கடேசன் மற்றும் அவரது மகன் ரோஹித்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவரும் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், புதிய கார், வேன் ஆகியவற்றை விற்பனை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.இவர்களிடம் மினி பஸ் வாங்குவதற்காக, கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கடன்கள் வாங்கி, பல்வேறு தவணைகளில் 27.10 லட்சம் ரூபாய் அபிஷேக் கொடுத்துள்ளார்.பணத்தை வாங்கியவர்கள், மினி பஸ் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். அபிஷேக் பணத்தை திருப்பி கேட்டபோது, 8.50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளனர்.மீதி பணத்திற்கு, தங்கள் 'டொயோட்டா இன்னோவா' காரை அபிஷேக்கிடம் கொடுத்து, ஓரிரு மாதங்களில் பணத்தை கொடுத்து, காரை வாங்கி செல்வதாக கூறியுள்ளனர்.இதையடுத்து, கடந்த ஜன., 20ம் தேதி அபிஷேக் மீதமுள்ள 18.60 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு இருவரும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து. கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அபிஷேக் புகார் அளித்தார்.விசாரித்த இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த ஆவடி, சரஸ்வதி நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 49, என்பவரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ரோஹித்தை போலீசார் தேடி வருகின்றனர்.