5 ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணி காட்டியவர் கைது
பூக்கடை, சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, 2017ம் ஆண்டு, பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில், மணலியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.இவ்வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன், எட்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, நீதிமன்ற பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரமேஷ், 2020 செப்., 10ம் தேதி முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த காரணத்தினால், அவரை கைது செய்ய, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.இது தொடர்பாக, பூக்கடை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மணலியைச் சேர்ந்த ரமேஷ், 27, என்பவரை, நேற்று முன்தினம், அம்பத்துார் அருகே மடக்கி பிடித்தனர்.விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.