திருமங்கலம்: புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த குடியிருப்பில், 7 வயது சிறுமியை வீட்டுக்கு கடத்திச் சென்று, போதை நபர் சீரழித்த சம்பவம், சென்னை திருமங்கலத்தில் நடந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபருக்கு மாவுக்கட்டு போடப்பட்டு உள்ளது. அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில், நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டம் நடந்தது. 'ஸ்பீக்கர்'கள் வைத்து, உற்சாக பாடல்களுடன் கொண்டாட்டம் நடந்தது. குடியிருப்போரின் கவனம் எல்லாம் கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மதிவாணன், 29, என்பவர், வீட்டருகே வசிக்கும், 7 வயது சிறுமியை, தன் வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து, 'ஸ்பீக்கர்' அணைக்கப்பட்டபோது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, குடியிருப்பு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சத்தம் கேட்டு மதிவாணனின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். மதிவாணனின் அத்துமீறலால், சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தது தெரிந்தது. சிறுமியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆத்திரமடைந்த அப்பகுதியினர், மதிவாணனுக்கு தர்ம அடி கொடுத்து, திருமங்கலம் உதவி கமிஷனர் பிரம்மானந்திடம் ஒப்படைத்தனர். மதிவாணனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், அதீத மதுபோதையில் சிறுமியை சீரழித்ததும் தெரிந்தது. திருமங்கலம் மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து, மதிவாணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். இதனிடையே, மதிவாணன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது வழுக்கி விழுந்து, இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மாவு கட்டு போடப்பட்டுள்ளது.