மேலும் செய்திகள்
சித்துாரில் மருதுபாண்டியர் வெண்கல சிலை திறப்பு
15-Aug-2025
மணலி, குத்தகைக்கு விடப்பட்டிருந்த வீடுகளை விற்பனை செய்த, 'பலே கில்லாடி'யான அ.தி.மு.க., பிரமுகரை, போலீசார் தேடி வருகின்றனர். கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 44; அ.தி.மு.க., பிரமுகர். இவருக்கு சொந்தமாக மணலி, காமராஜர் சாலையில், 'ராஜலட்சுமி' அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில், மணலி, சின்னமாத்துரைச் சேர்ந்த கிரிதரன், 41, மூன்று வீடுகளையும், அவரது சகோதரர் ரகுவரன், 38, இரண்டு வீடுகளையும், தலா, 40 லட்சம் ரூபாய் என, ஐந்து வீடுகளை, இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதையடுத்து ரமேஷ், கடந்தாண்டு மார்ச் 26ம் தேதி, சகோதரர்களுக்கு, வீடுகளை கிரையம் செய்து பத்திரம் வழங்கியுள்ளார். ஆனால், கிரிதரன், ரகுவரனுக்கு விற்பனை செய்த ஐந்து வீடுகளையும், அதற்கு முன்பே தலா, 8 லட்சம் ரூபாய் வீதம், 40 லட்ச ரூபாய்க்கு, வேறு சிலருக்கு குத்தகை விடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து சகோதரரர்கள், ரமேஷிடம் கேட்டுள்ளனர். 10 மாதங்களாகியும், ரமேஷ் வீடுகளை ஒப்படைக்காமல், சகோதரர்களை அவதுாறாக பேசி வந்துள்ளார். இதையடுத்து சகோதரர்கள், திருவொற்றியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள, ஜூலை, 28ல் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து நான்கு பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகளை இருமுறை விற்றும், குத்தகைக்குவிட்டும் 20 கோடி ரூபாய் வரை, ரமேஷ் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. நில அபகரிப்பு முயற்சியில், கொடுங்கையூர் போலீசாரால் ரமேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்.
15-Aug-2025