சென்னை, சென்னையில், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி வழித்தடத்தில், ஒன்பது சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 மேம்பால மெட்ரோ ரயில் நிலைங்களும் அமைக்கப்பட உள்ளன.இந்த வழித்தடத்தில், தியாகராய நகர் பனகல் பூங்காவில் 'பெலிகன்' எனும் சுரங்கம் தோண்டும் இயந்திரம், நேற்று ஈடுபடுத்தப்பட்டது. நிலத்திற்கடியில், 18 மீட்டர் ஆழத்தில், சுரங்கப்பாதை பணி துவங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறியதாவது:இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இதில், 19 இயந்திரங்கள், பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.பனகல் பூங்காவில், 'பெலிகன்' எனும் இயந்திரத்தால் சுரங்கம் தோண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இங்கு, நிறைய சவால்கள் உள்ளன. குறிப்பாக, அதிகளவில் உள்ள களிமண்ணை வெளியேற்றுவது, சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்குவது சிரமம்.சுரங்கப்பாதை அமைக்கும் இடங்களைச் சுற்றி, பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதவாறு பணிகளில் கவனம் செலுத்தப்படும்.இந்த இயந்திரம், கோடம்பாக்கத்தை அடையும்போது, நான்கு ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும். தொடர்ந்து, பவர் ஹவுஸை அடைகிறது.பனகல் பூங்காவில் இருந்து, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை 2 கி.மீ., ஆகும். இந்த தொலைவை சுரங்கம் தோண்டும் இயந்திரம் இந்த ஆண்டு டிச., இறுதிக்குள் அடைந்துவிடும்.அங்கிருந்து அடுத்த ஒன்றரை மாதத்தில் 'பீகாக்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம், பணியைத் துவங்க உள்ளது. இரு இயந்திரங்களும், இந்த ஆண்டு இறுதிக்குள் கோடம்பாக்கம் பவர் ஹவுஸை அடைந்துவிடும்.கோடம்பாக்கம் ரயில் தண்டவாளங்கள் கீழ் சுரங்கம் தோண்டும்போது, தண்டவாளம் பாராமீட்டரை அளந்து கொண்டிருப்போம். அதில் மாற்றம் இருந்தால், ரயில் வேகத்தை கட்டுப்படுத்தும்படி ரயில்வேக்கு தகவல் அளித்துள்ளோம். இப்பணிகளுக்கு, அவர்கள் சில நிபந்தனைகள் விதித்துள்ளனர்.பனகல் பூங்கா - கோடம்பாக்கம் இடையே மெட்ரோ பணிகள் 2026 ஜூனில் முடியும். இத்தடத்தில் 2027ல், மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக துவங்கப்படும். மெட்ரோ ரயில் பணியின்போது, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தி கொடுக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.