மோரை ஊராட்சி ஆக்கிரமிப்பு அகற்றம் பட்டா பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு
ஆவடி, கொரட்டூர், திருவேற்காடு, அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில், ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை அகற்றி, ஆவடி மோரை ஊராட்சி புதிய கன்னியம்மன் நகரில், கடந்த 2009ம் ஆண்டு மறு குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு வட்டாட்சியர் சார்பில் முத்திரையிடப்பட்ட 'டோக்கன்'களும் வழங்கப்பட்டன.இந்நகரில், 'ஏ' முதல் 'டி' வரையிலான 'பிளாக்'கு களில் 2,800க்கும் மேற்பட்ட குடியிருப்பு மனைகள் உள்ளன. இங்கு வீடு கட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 450 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது.இப்பகுதியின் சுற்றுவட்டார பொது இடங்களில், கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் ஜோராக முளைத்தன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.கடந்தாண்டு இறுதியில் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறியும் வகையிலும், பயனாளிகளுக்கு பட்டா வழங்கவும் வருவாய்த்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது குறித்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மோரை பகுதி ஊராட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய கன்னியம்மன் நகரில் உள்ள பொது பயன்பாட்டு இடத்தில், சிலர் 500 சதுரடி வீதம் இடத்தை இரும்பு ஷீட்டால் கொட்டகை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். சிலர் குடிசை போட்டுள்ளனர்.இவ்வாறு 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆக்கிரமிப்பாளர்கள் கோரிக்கைக்கு ஏற்ப, நேற்று முன்தினம் வரை அவகாசம் தரப்பட்டது.சிலர் ஆக்கிரமிப்பை தாமாக முன்வந்து அகற்றினர். அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள், நேற்று முன்தினம் இரவு வரை வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.புதிய கன்னியம்மன் நகரில் நடந்த கணக்கெடுப்பின்படி 1,850 பயனாளிகள் கண்டறியப்பட்டு, அரசிடம் அறிக்கை தரப்பட்டுள்ளது. 2008 - 09ம் ஆண்டு பயனாளிகளுக்கு மனை ஒதுக்கீட்டின்போது, கலெக்டர் அலுவலக குறிப்பின்படி உள்ள விபரங்களும் சரிபார்க்கப்பட்டு உள்ளது. விரைவில் பட்டாவிற்கான தீர்வு கிடைக்கும். போலி டோக்கன்களை கண்டறிந்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.- வருவாய்த்துறை அதிகாரிகள்.