| ADDED : ஜன 27, 2024 12:44 AM
புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில் 342 தெருக்கள் உள்ளன. கடந்த 2019 முதல், இப்பகுதியில் பாதாள சாக்கடை பயன்பாட்டில் உள்ளது.பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு 'மேன்ஹோல்' எனும் திறந்து மூடக்கூடிய இரும்பு திறப்பான்கள், 30 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.இந்த 'மேன்ஹோல்'களில், 200க்கும் மேற்பட்டவை தற்போது, படுமோசமான நிலையில் உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதியில், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் செய்து வருகிறது.இப்பகுதியில், குடிநீர் வழங்கல் பணிக்காக நிலத்திற்கடியில் அமைக்கப்பட்ட குழாய்களில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுகிறது. இதனால், இரு ஆண்டுகளாக முறையான குடிநீர் வினியோகம் நடக்கவில்லை.தவிர, பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்வதற்காக அமைக்கப்பட்ட பெருபாலான 'மேன்ஹோல்'கள் உடைந்துள்ளன. 200க்கும் அதிகமாக மேன்ஹோல்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இப்பகுதியின் பல தெருக்களில் 'மேன்ஹோல்' வழியாக சாக்கடை நீர் வெளியேறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதி இணைப்புக் குழாய்களின் தரத்தை உறுதி செய்து, உடைந்த மேன்ஹோல்களுக்கு பதிலாக புதிதாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.