உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயிலாப்பூர் நிதி நிறுவன முதலீட்டாளர் நலன் பாதுகாக்கப்படும்: ஐகோர்ட் உறுதி

மயிலாப்பூர் நிதி நிறுவன முதலீட்டாளர் நலன் பாதுகாக்கப்படும்: ஐகோர்ட் உறுதி

சென்னை, மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குநர் தேவநாதன், அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் உட்பட ஆறு பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், மூன்றாவது முறையாக ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவநாதன் உட்பட மூவர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், 'தேவநாதனுக்கு சொந்தமாக 2,000 கிலோ தங்கம் இருந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 'தற்போது தாக்கல் செய்த சொத்து ஆவணங்களில், அந்த தங்கம் குறித்த விபரங்கள் இடம்பெறவில்லை. அந்த தங்கம் இருந்தாலே, தங்களுக்கு வட்டியுடன் பணத்தை திரும்ப அளிக்க முடியும்' என, தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், 'நீதிமன்ற உத்தரவுபடி தேவநாதன் தாக்கல் செய்த, 300 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், பாதிக்கும் மேற்பட்டவை வில்லங்க சொத்துக்கள் என்பது தெரியவந்துள்ளது. 'அவர், பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குகளின் மதிப்பும் குறைந்து வருகிறது' என, தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பு வாதம் குறித்து, ஆக.,1ல் தேவநாதன் தரப்பு பதிலளிக்கும்படி கூறிய நீதிபதி, “அன்றைய தினம் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றார். மேலும், “பாதிக்கப்பட்ட அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும்” என, நீதிபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை