| ADDED : பிப் 13, 2024 12:42 AM
நங்கநல்லுார், நங்கநல்லுார் குருவாயூரப்பன் கோவில் புனரமைப்பின்போது, பிரஹார மண்டபம், 'ஜாக்கி' வைத்து உயர்த்தி அகற்ற முயன்றதில் திடீரென சரிந்து விழுந்தது. சென்னை, நங்கநல்லுார், ராம் நகரில் அமைந்துள்ளது உத்தர குருவாயூரப்பன் கோவில். இக்கோவில் கட்டுமானம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலைப் போல, கான்கிரீட் வாயிலாக கட்டப்பட்டது. இக்கோவிலை குருவாயூரப்பன் ஆஸ்தீக சமாஜம் என்ற அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. கோவில் கட்டி, 50 ஆண்டுகள் மேலான நிலையில், அடுத்தடுத்து போடப்பட்ட சாலைகளால், கோவில் பகுதி சாலை மட்டத்திற்கு கீழ் சென்றது. ஒவ்வொரு மழைக்காலத்திலும், தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து கோவிலை 'ஜாக்கி' தொழில்நுட்பம் வாயிலாக உயர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. கர்ப்பக்கிரஹம் உள் சன்னிதி அனைத்தும், தரை மட்டத்தில் இருந்து 5 அடிக்கு உயர்த்தப்பட்டது. கட்டுமானப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பிரஹார மண்டபத்தை உயர்த்தும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டபத்தின் பின் பகுதி, ஜாக்கி வாயிலாக உயர்த்தும் பணி நேற்று நடந்தது.அப்போது, எதிர்பாரா விதமாக பின்புற மண்டபம் திடீரென சரிந்து கீழே விழுந்தது.இதில், அங்கு பணிபுரிந்துக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். ஒருவருக்கு மட்டும் கையில் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சரிந்த மண்டபம் பின்புற வீட்டின் மதில் சுவர் மீது விழுந்ததால், அதன் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டது. அந்த வீட்டு உரிமையாளருடன் கோவில் நிர்வாகத்தினர் பேச்சு நடத்தி, சரிசெய்து கொடுப்பதாக சமாதானம் செய்தனர். இந்த விபத்து குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.