கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆட்டோ ஓட்டிய இயற்கை ஆர்வலர்
சென்னை, மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு, பலருக்கும் மரக்கன்றுகளை பரிசளித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் குபேந்திரன், நேற்று கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, ஆட்டோ ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன், 52. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.புவி வெப்பமடைதலை தடுப்பதிலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் ஆர்வம் உள்ளவர்.தான் ஓட்டும் ஆட்டோவிலேயே சிறிய தோட்டம் வளர்த்து, இயற்கை சூழல் பாதுகாப்பு பற்றி, பிரசாரம் செய்து வருகிறார்.தவிர, தன் மாத வருமானத்தில், 10 சதவீதத்தில் மரக்கன்றுகள் வாங்கி, பலருக்கும் தானமாக வழங்கி, மரம் வளர்த்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆட்டோ ஓட்டி, வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.