போஸ்டர்களால் நாசமாகும் புது ரயில்வே மேம்பாலம்
ஆவடி,சென்னை - திருவள்ளூர் இணைக்கும் வகையில், பட்டாபிராமில் எல்.சி.,கேட் - 2 ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இங்கு, 45 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்வே 'கேட்' மூடப்பட்டு, சென்னையில் இருந்து பட்டாபிராம் 'சைடிங்' செல்லும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதனால், சாலையின் இருபுறமும் அரை கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 78.31 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசு இணைந்து மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மேம்பாலத்தில் ஒரு வழிப்பாதை பணிகள் முடிந்து, செப்., 25ம் தேதி திறக்கப்பட்டது.தற்போது, மீதுள்ள ரயில்வே பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீடில் நடக்கிறது. இந்நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலர் சுய விளம்பரம் தேடிக்கொள்ள, வாகன ஓட்டிகள் கவனம் ஈர்க்கும் வகையில் மேம்பால சுவரில் 'நோட்டீஸ்' ஓட்டியுள்ளனர். எனவே, விதிமீறி வாகன ஓட்டிகளின் உயிரை காவு வாங்கும் வகையில், 'நோட்டீஸ்' ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.