போலீசை மிரட்டிய கும்பல் ஒருவருக்கு எலும்பு முறிவு
செம்மஞ்சேரி,:சோழிங்கநல்லுார் நான்குவழி சந்திப்பு எப்போதும் பரபரப்பாக இருக்கும். நேற்றுமுன்தினம் இரவு, காரப்பாக்கத்தில் இருந்து ஒரு ஆட்டோ, சோழிங்கநல்லுார் நோக்கி, தாறுமாறாக ஓடியது. வாகன ஓட்டிகளை உரசி சென்றதால், செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் ஆட்டோவை மறித்தனர். அப்போதும், போலீசாரை மோதுவது போல் சென்றது. சிறிது துாரம் சென்று, ஆட்டோவை மறித்தபோது, அதில் இருந்த நான்கு பேர் மது போதையில் இருந்தனர். விசாரணையில், கண்ணகிநகரை சேர்ந்த நாகராஜ், 25, பாண்டி, 28, லட்சுமணன், 27, என்பது தெரிந்தது. ஒருவர் தப்பிவிட்டார்.அவர்களுக்கு மது போதை குறித்து பரிசோதனை செய்ய முயன்றபோது, நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்; போலீசாரை தரக்குறைவாக திட்டினார். ஒரு கட்டத்தில், மறைத்து வைத்திருந்த பிளேடால் தன் கழுத்தை கீறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின், மூன்று பேரும் சேர்ந்து, ஓ.எம்.ஆர்., சாலை குறுக்கே படுத்து, போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.திடீரென கீழே படுத்தபோது, அவ்வழியாக சென்ற கார், நாகராஜ் கால் மீது ஏறியது. இதில், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போதை பரிசோதனைக்காக, பாண்டி, லட்சுமணன் ஆகியோரை, போலீசார் மருத்துவமனை அழைத்து சென்றனர்.