| ADDED : மார் 19, 2024 12:22 AM
சென்னை மாதவரம் நெடுஞ்சாலை 11 கி.மீ., துாரம் கொண்டது. இதில் வடகரை - மஞ்சம்பாக்கம் இடையிலான 6 கி.மீ., துாரம் வடகிழக்கு பருவமழையால் கடும் சேதமடைந்தது.புழல் ஏரி மற்றும் ரெட்டேரி நீர், வடப்பெரும்பாக்கம் அருகில் நாள் கணக்கில் தேங்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இச்சாலையை தற்காலிகமாக சீரமைப்பதற்கு, 1 கோடி ரூபாயை அரசு சமீபத்தில் ஒதுக்கீடு செய்தது.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நாள் நெருங்கிய நிலையில், சமீபத்தில் அவசர அவசரமாக சாலை பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன. அரசு உத்தரவுப்படி 'மில்லிங்' எனப்படும், பழைய சாலையை பெயர்த்து எடுக்கும் பணிகள் நடக்கவில்லை.இது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திட்ட மதிப்பீட்டில், 200 மீட்டருக்கு சாலையை முழுமையாக புனரமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆங்காங்கே ஒட்டு போட்டு செலவு மிச்சப்படுத்தப்பட்டது.இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ், சாலையை முறையாக சீரமைக்க உத்தரவிட்டார்.அதன்படி, தற்போது, சாலையை மில்லிங் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. அவசர கதியில் போடப்பட்ட புதிய தார் கலவையும், 'மில்லிங்' செய்து பெயர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.