வழிநெடுக குப்பை கழிவுகளுடன் வரவேற்கும் பள்ளிக்குப்பம் சாலை
திருவேற்காடு: திருவேற்காடு அடுத்த சென்னீர்குப்பம் - பள்ளிக்குப்பம் சாலையில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்ளன. சுற்றுவட்டார குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகள், சாலையோரத்தில் வழிநெடுக கொட்டப்படுகின்றன. குறிப்பாக, இரவு வேளைகளில் மர்ம நபர்கள் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சென்னீர்குப்பம் ஊராட்சி நிர்வாகம் அதை கண்டுகொள்ளாத நிலையில், நாளுக்கு நாள் இங்கு குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், அங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.